Translate

Thursday, March 14, 2013

மதித்திடுவீர்(எனது சகோதரர்களே!) குர்ஆனையும், ஹதீஸையும், உங்கள் கண் முன் விரித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஆழ்ந்து சிந்தித்து, அவ்விரண்டினையும் ஆதாரமாகக் கொண்டே அமல் செய்யுங்கள்!
(அவ்வாறன்றி) அவர் அப்படி சொல்லியிருக்கிறார். இதில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது எனும் ஆதாரமற்ற கூற்றுக்களைக் கண்டு, மருண்டு விடாதீர்கள்? (எவர் எப்படிச் சொன்னாலும், எதிலும் எப்படி சொல்லப்பட்டிருப்பதாலும் சரி) அல்லாஹ் (தமது வேதத்தில் இப்படித் தானே) கூறுகிறான்: நமது தூதர் உங்களிடம் கொண்டு வந்தவற்றைக் கடைபிடித்து, உங்களை விட்டும் தடுத்தவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள் (59:7)
குறைபாடு, அபாயம் முதலியவற்றிலிருந்து, பாதுகாப்பான நிலை, குர்ஆன், ஹதீஸ் ஆகிய இவ்விரண்டில் மட்டுமே இருக்கிறது. இவையல்லாதவற்றில் நாசம் தானிருக்கின்றன. இவ்விரண்டினைக் கொண்டே ஓர் அடியான் இறைநேசன் எனும் உயர்பதவி அடையமுடியும். ஃபுதூஹுல்கைப் (சொற்பொழிவு – 36)
மேற்காணும் தமது போதனைக்கு சான்றான, அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள், குர்ஆனின் (59:7) திருவசனத்தை மேற்கோள்காட்டி, இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே குர்ஆனையும், ஹதீஸையும் தமது வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு, வாழந்து மறைந்த ஒரு நல்லடியாரை இன்று மக்கள், ஏதோ அல்லாஹ் அவர்களிடத்தில் பாதுகாப்பு இலாக்காவை பரிபூரணமாக ஒப்படைத்துவிட்டு, எவரும் பாதுகாப்புக்காக, என்னை அணுக வேண்டாம், தேவையான பாதுகாப்புகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக, அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பொறுப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“ஆகவே அனைவரும் தமக்கு ஆபத்துகள் நிகழும்போது, அவர்களையே “யாமுஹ்யத்தீன்” என்று அழைத்து, அனைத்து காரியங்களையும் அவரே வைத்தே பார்த்துக் கொள்ளுங்கள், நான் ஓய்வு எடுக்கப்போகிறேன்” என்று கூறியிருப்பதுபோல், கருதிக்கொண்டு அல்லாஹ்வையும், குர்ஆனையும் அடியோடு ஒதுக்கிவிட்டு ஏன் அப்துல்காதீர் ஜீலானி(ரஹ்) அவர்களின் போதனையைக்கூட சிறிதும் மதிக்காது, அப்பட்டமான வழிகேட்டில் ஆழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
அத்தகையோருக்கு அவர்களின் அரும்போதனைகள்:
உமக்கேற்படும், எக்கஷ்டத்தையும், அல்லாஹ்வன்றி மற்றவரிடம் முறைப்பாடு செய்ய வேண்டாம். ஏனெனில் , அல்லாஹ்(அல்குர்ஆனில்) கூறுகிறான்; அல்லாஹ் உம்மை ஒரு கஷ்டத்தில் மாட்டி வைத்துவிட்டால், அவனன்றி உம்மை அதிலிருந்து விடுவிப்போர் அறவே கிடையாது (10:107) (ஃபத்ஹுர்ரப்பானீ)
மக்களிடம், அப்துல் காதிர்ஜீலானி(ரஹ்) அவர்கள் தமது ஃபத்ஹுர் ரப்பானி எனும் அவர்களின் நூலில் திருகுர்ஆனில் ஒரு வசனத்தையும் சான்று காட்டி, கஷ்டம் ஏற்படும் போது, அல்லாஹ் ஒருவனையே அழைத்து அவனிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என்றுதானே கூறியிருக்கிறார்கள் என்று உண்மை நிலையை எடுத்துச் சொன்னால், அதெல்லாம் சரி……
“ஆகாயத்திற்கு மேலிருந்து கொண்டோ, அல்லது ஆழ்கடலின் அடியிலிருந்து கொண்டோ, ஆபத்து வரும் யாரும் என்னை அழைத்தால் நான் வந்து ஆஜராகி, அவர்களைக் காப்பாற்றுவேன்” என்று ஒரு பைத்து, அவர்களே சொல்லியிருப்பதாக கிதாபுகளில் காணப்படுகிறது. என்று கதையளக்குகிறார்கள்.
இத்தகைய “கால, கீல” (அவர் அப்படி சொல்லியிருக்கின்றார் இதில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது) என்பன போன்ற ஆதாரமற்ற கூற்றுக்களைத்தான் கண்டு மருண்டு விட வேண்டாம் என்று அவர்கள் தமது போதனையில் கூறி அவற்றை ஆணித்தரமாக அடித்துத் தகர்த்திருக்கிறார்கள் என்பதை சிந்திப்பார்களாக!

No comments:

Post a Comment