Translate

Thursday, March 14, 2013

(தலை)விதி


அலீ(ரலி) அறிவித்தார். 
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (பகீஉல்ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் 'சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தம் இருபபிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை' என்றார்கள். 
அப்போது மக்களில் ஒருவர் 'அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக் கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்து விடமாட்டோமா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்டார். 
நபி(ஸல்) அவர்கள் 'இல்லை நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது' என்று கூறிவிட்டு பிறகு '(இறைவழியில் வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்' எனும் (திருக்குர்ஆன் 92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில், தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி 'இவர் நரகவாசிகளில் ஒருவர்' என்று கூறினார்கள். 
போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களில் ஒருவர் வந்து 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து 'அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார்' என்று கூறினார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் 'அவர் நரகவாசிகளில் ஒருவர் தாம்' என்றே கூறினார்கள். 
அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்குப் போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தம் கையை அம்புக் கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்பை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து 'இறைத்தூதர் அவர்களே! தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதா தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராம்விட்டார்)' என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'பிலாலே! எழுந்து சென்று 'இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும் அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகிறான்' என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள்' என்று கூறினார்கள். 
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். 
நான் நபி(ஸல்) அவர்களுடன் பங்கெடுத்த (கைபர்) போரில், எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்த ஒருவரைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் 'நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு குறிப்பட்டார்கள் என்பதை அறிய) மக்களில் ஒருவர் அவரைப் பின்தொடர்ந்து சென்றார். அந்த மனிதரோ இணைவைப்பாளர்களை எதர்த்து எல்லாரையும் விடக் கடுமையாகப் போராடும் அதே நிலையில் இருந்தார். இறுதியில் அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தம் வாளின் கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து (அழுத்தி)க் கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது. 
(பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் நபி(ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்து 'தாங்கள் இறைத்தூதர்தாம் என்று நான் உறுதி கூறுகிறேன்' என்றார். 
அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். அவர் 'தாங்கள் எவரைக் குறித்து நரகவாசிகளில் ஒருவரை பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று குறிப்பிட்டீர்களோ அவர் முஸ்லிம்களுக்காகப் போராடுவதில் மகத்தான (பங்காற்றுப)வராகத் திகழ்ந்தார். (தாங்கள் அவரைப் பற்றி நரகவாசி என்று குறிப்பிட்டிருப்பதால்) அவர் இதே (தியாக) நிலையில் இறக்கப்போவதில்லை என்று நான் அறிந்தேன். அவர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டபோது அவரசமாக இறந்துவிட விரும்பி தற்கொலை செய்தார்' என்றார். அப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஓர் அடியார் நரகவாசிகளின் செயல்களைச் செய்துவருவார். ஆனால, (இறுதியில்) அவர் சொர்க்கவாசகளில் ஒருவராம்விடுவார். இன்னொருவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துவருவார். ஆனால், (இறுதியில்) அவர் நரகவாசிகளில் ஒருவராம்விடுவார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment