Translate

Wednesday, March 20, 2013

அறப்போரும்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். 
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாகி விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள். 
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத்(இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது. ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்" என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்" என்று பதிலளித்தார்கள். 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படி எதையும் நான் காணவில்லை" என்று கூறிவிட்டு, 'அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார். 
"அறப்போர் வீரனின் குதிரை, அதைக்கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்" என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
"இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?' என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள். மக்கள், 'பிறகு யார்?' என்று கேட்டார்கள். 'மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இறைவழியில் போராடுபவரின் நிலையானது, உண்மையாகப் போராடுபவர் யார் என்பது (அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வுக்கே தெரியும் - (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும் வருபவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரை சொர்க்கத்தில் நுழைய வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான் அல்லது நன்மையுடனோ, போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்ப வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
"அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி" என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்க இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், 'சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ்? தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்: 
மேலும், 'அதற்கு மேலே கருணையாள(னான இறைவ)னின் அர்ஷு - சிம்மாசனம் இருக்கிறது. இன்னும், அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன். 
மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலைஹ்(ரஹ்), தம் தந்தையிடமிருந்து, 'அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது" என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சந்தேகத்தொனியின்றி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னை ஒரு மரத்தின் மீதேற்றி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச் செய்தார்கள். அதை விட அழகான ஒரு வீட்டை நான் பார்த்ததேயில்லை; (அவர்களில் ஒருவர்), 'இந்த வீடு இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் வீடாகும்" என்றார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும். 
இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
சொர்க்கத்தில் ஒரு வில்லுக்குச் சமமான (ஒரு முழம்) அளவு (இடம் கிடைப்பது) சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். மேலும், இறைவழியில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கிறார். எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார். 
இதை அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். 
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னைவிட்டுப் பின்தங்கி விடுவதால் இறை நம்பிக்கையாளர் சிலரின் உள்ளங்களில் வருத்தம் உண்டாகாது என்றிருக்குமாயின் மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்களும் என்னிடம் இருந்திருக்குமாயின் இறைவழியில் போரிடச் செல்லும் எந்தச் சிறுபடையையும்விட்டு நான் பின்தங்கியிருந்திருக்க மாட்டேன். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் இறைவழியில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்படவேண்டும் என்றே விரும்புகிறேன். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். 
நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பது போல் கூறலானார்கள்:) 'ஸைத் இப்னு ஹாரிஸா கொடியைக் கையிலெடுத்து (இஸ்லாமியச் சேனைக்குத் தலைமை தாங்கி)க கொண்டுள்ளார். இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் அதை(த் தம் கையில்) எடுத்து (தலைமை தாங்கியபடி போரிட்டு)க் கொண்டுள்ளார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தம் கையில்) எடுத்து (தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டு)ள்ளார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, காலித் இப்னு வலீத் (தளபதியாக) நியமிக்கப்படாமலேயே அதைக் கையிலெடுத்துள்ளார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டுவிட்டது. (வீர மரணத்தினால் அவர்கள் பெற்ற பெரும் பேற்றினை நாம் அறிந்த பிறகும்) அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது..." 
...அறிவிப்பாளர் அய்யூப்(ரஹ்), 'அல்லது, 'அவர்கள் நம்முடன் இருப்பது அவர்களுக்கே மகிழ்ச்சியளிக்காது' என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறார். 
இதைக் கூறியபோது நபி(ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 
உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அறிவித்தார். 
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக் கொண்டே கண்விழித்தார்கள். நான், 'ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போல் (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்து கொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டது" என்று கூறினார்கள். நான், 'அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்தது போன்றே செய்தார்கள். முன்பு கேட்டது போன்றே நானும் கேட்டேன். முன்பு பதில் சொன்னது போன்றே அவர்களும் பதில் சொன்னார்கள். நான், 'அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினேன். அவர்கள், 'முதன் முதலாகச் செல்பவர்களில் நீங்களும் ஒருவர் தாம்" என்று கூறினார்கள். 
(உம்மு ஹராம்(ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் இப்னு மாலிக்(ரலி) தெரிவிக்கிறார்கள்:) 
அவ்வாறே, தளபதி முஆவியா(ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் (சைப்ரஸ் தீவில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) புறப்பட்டுப் போனார்கள். தம் படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் நாட்டு திசைநோக்கிச் சென்றார்கள். உம்மு ஹராம்(ரலி) ஏறிக் கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக் கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது; அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), 'உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் நான் எடுத்துரைக்கிறேன்; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்" என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள்; அவரை எதுவும் செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், 'அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று கூறினார். பிறகு, அவரின் எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர. 
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம்(ரஹ்), 'கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக் கொண்டார்)' என்று (அறிவிக்கப்பட்டதாக) கருதுகிறேன்" என்று கூறுகிறார்.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு, 'நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தான் பெற்ற நற்பலனைக் குறித்து திருப்தி) கொள்ளும்படிச் செய்தான்' என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ' 'நாங்கள் எங்கள் இறைவனைச் சென்றடைந்து விட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்துவிட்டான். அவனைக் குறித்து நாங்கள் திருப்தியடைந்தோம். தன்(வெகு மதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்" என்னும் இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் குலத்தாரைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், பனூ உஸைய்யா ஆகிய கிளையினருக்குக் கேடு நேர, நாற்பது நாள்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள். 
4:95.ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள் தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்;. ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
9:20.எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

No comments:

Post a Comment