Translate

Monday, July 23, 2012

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சூரிய ஒளியின் பங்கு.

சூரிய ஒளி புகாத வீட்டில் வைத்தியர் அடிக்கடி நுழைய நேரிடும்’ என்ற அனுபவ மொழியே சூரியனுக்கும் மனித ஆரோக்கியத்துக்குமான நெருக்கத்தைப் பளிச் எனப் புரியவைக்கும். உண்மைதான்... பைசா செலவு இல்லாமல், நம் உடல் நலனைப் பாதுகாக்கவும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் சூரிய ஒளியின் பங்கு முக்கியம். 
ஆரோக்கிய வாழ்க்கைக்கு சூரிய ஒளியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்று ஆயுர்வேத மருத்துவர் முருகப்பன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் இருவரும் ஒருமித்துப் பேசினார்கள்.
ஆயுள் பெருகும்: ஆயுளை அதிகரிக்கச் செய்யும் சத்துக்களில் முதன்மையானது வைட்டமின் டி. நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தில் 90 சதவிகிதம் வரை சூரிய ஒளியில் இருந்தே கிடைக்கிறது. பால், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் இந்தச் சத்து அதிக அளவில் உள்ளது. பொதுவாக ரத்தத்தில் ஒரு மி.லி-க்கு 30 நானோ கிராம் வைட்டமின் டி இருக்க வேண்டும். இந்த அளவு குறையும்பட்சத்தில் தசைகள் வலு இழந்து, எலும்புகளும் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் பலமும் குறைகிறது.

சூரிய ஒளியில் உள்ள புற ஊதா பி கதிர்கள் உடலின் மீது படும்போது, தோலில் உள்ள கொழுப்பு உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு வைட்டமின் டி ஆக மாறி உடலுக்குள் செல்லும். சித்த மருத்துவத்தில் 'காந்தி சுட்டிகை’ என அழைக்கப்படும் சூரியக் குளியலால் உடலின் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும், உணவு செரிமானத் தன்மையை அதிகரித்து வளர்சிதை மாற்றத்துக்கும் துணை புரியும்.
டெஸ்டோஸ்டிரான் அதிகரிக்கும்: ஆண் தன்மையைத் தூண்டும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு அதிகரிக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது. காலை, மாலை இரு வேளைகளும் குறைந்தது அரை மணி நேரம் சூரிய ஒளியில் நின்றாலே, உடலுக்குத் தேவையான 69 சதவிகித டெஸ்டோஸ்டிரான் இயற்கையாகவே கிடைத்துவிடும்.
விழிப்பு உணர்வு கூடும்: சூரிய உதயத்துக்குப் பிறகு பெரும்பாலான ஹார்மோன் சுரப்புகள் அதிகரிப்பதும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் ஹார்மோன் சுரப்புகள் குறைவதும் இயல்பு. இந்தச்சுழற்சிமுறையைத்தான் 'சிர்காடியன் ரிதம்’ என்கிறோம். பெரும்பாலான சித்த மருந்துகளை அந்திசந்திகளில் சாப்பிட சொல்வது இந்தச் சுழற்சியை ஒட்டித்தான். சூரிய உதயத்துக்குப் பிறகு அதிகம் சுரக்கும் 'செரோடனின்’ என்கிற ஹார்மோன்தான் நம்மை எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கச் செய்கிறது. உடல்மீது வெயில்படுவதால் செரோடனின் அதிகம் சுரந்து, நமது நரம்பு மண்டலம் விழிப்புடன் இருக்கவும் துணை செய்கிறது.
புற்றுநோயைத் தடுக்கும்: சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில் உள்ள மெலனின் என்ற நிறமியுடன் இணைந்து புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகின்றன. எனவே, தினமும் பத்து நிமிடம் உடலில் சூரிய ஒளி படும்படி நின்றாலே, சருமப் புற்றுநோயைத் தவிர்த்துவிட முடியும். மேலும் நுண்ணுயிர்க் கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளையும் சூரிய ஒளிக்கதிர்கள் அழித்துவிடுகின்றன.
எலும்புகள் உறுதியாகும்: குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் பெரியவர்களின் எலும்பு வலுவடைவதற்கும் கால்சியம் தேவை. நாம் சாப்பிடும் உணவில் உள்ள கால்சியத்தைக் கிரகித்து எலும்புக்கு அளிக்கவல்லது வைட்டமின் டி3. இதனால்தான், 'பச்சிளம் குழந்தைகள் மீது காலை வெயில்பட வேண்டும்’ என்று நம் பாட்டிமார்கள் வலியுறுத்துவார்கள். இதனால், எலும்புகளை வலு இழக்கச் செய்யும் ரிக்கட்ஸ் பாதிப்பில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
கழிவுப் பொருட்கள் வெளியேறும்: உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் சூரியக் குளியல் சிறந்த முறை. சூரியக் குளியலின்போது பத்து நிமிடங்களிலேயே நன்றாக வியர்க்க ஆரம்பிக்கும். இதனால் தோலின் வழியாக உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும்.
காலை வெயில், மாலை வெயில் இரண்டுமே உடலுக்கு ஏற்றதுதான். அதனால், தாராளமாக வெயிலோடு விளையாடுங்கள்!
சூரிய நமஸ்காரம்!
பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வரும் யோகப் பயிற்சி முறைகளில் ஒன்று சூரிய நமஸ்காரம். இதில் கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல் என அனைத்து உள் உறுப்புகளும் மசாஜ் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரம் செய்தால், மலச்சிக்கல் தொந்தரவு அண்டாது. மேலும் வயிற்று உறுப்புகளில் ரத்தம் தேங்குவதும் தவிர்க்கப்படுகிறது. உடல் அசைவும் மூச்சு ஓட்டமும் இணக்கமாக நடைபெறும். நுரையீரலுக்குக் காற்றோட்டமும் தாராளமாகக் கிடைக்கிறது. உடலில் உள்ள எல்லா மூட்டுகளுக்கும் அசைவுகள் கிடைப்பதால் அவை வலுவடையும். மூளை மற்றும் வயிற்றில் உள்ள சுரப்பிகளையும் இது தூண்டும். கழுத்தை முன் பின்னாக வளைப்பதால் தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பிகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். சருமமும் புத்துணர்வு பெறும்.

No comments:

Post a Comment