Translate

Sunday, July 22, 2012

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்ப்பூசணி

குறைவான செலவில் அதிகமான லாபத்தை சம்பாதிக்க தர்ப்பூசணி பயிரிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மாதர்பாக்கம், போந்தவாக்கம், அமரம்பேடு, செதில்பாக்கம், மாநெல்லூர், நேமள்ளூர், பாதிரிவேடு, தேர்வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிட விவசாயிகள் ஆர்வத்தோடு உள்ளனர்.
அப்படி தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் விதைகளை மானிய முறையில் தந்து தோட்டக்கலைத் துறையின் ஆலோசனைப்படி குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்க வழிகளை தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிட ஆகும் முதலீடு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மட்டுமே. நிலத்தை உழுது பண்படுத்திய பின்பு 6-8 அடி அகல இடைவெளியில் கால்வாய் வெட்டிய பின் 3 அடி இடைவெளி விட்டு குழிகள் தோண்ட வேண்டும்.
இந்த குழியில் மக்கிய தொழு உரம், ரசாயன உரங்களை இட்டு நன்கு கலக்கிய பின்பு ஒரு குழிக்கு 3-4 விதைகளை இட்டு குழிகளை மூடி விட வேண்டும்.
விதை தூவிய 5-வது நாள் விதை முளைத்தல் நிகழும். இதைத் தொடர்ந்து வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. 15-ம் நாளுக்கு பிறகு நிலத்தில் முளைத்துள்ள களைகளை அகற்ற வேண்டும். இந்நிலையில் பூச்சிமருந்து தெளித்து பயிர்களை காக்க வேண்டியது அவசியமாகும்.
30-35-ம் நாளில் செடியில் பூப்பூக்க தொடங்கி அதை தொடர்ந்து காய் காய்த்து பெரிதாக தொடங்கும். பயிரிடப்பட்ட 65-75 நாள்களில் தர்ப்பூசணி நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருக்கும்.
இப்படி இரண்டு மாத கால பராமரிப்பில் தர்ப்பூசணி சாகுபடி செய்யும் போது அதிகபட்ச லாபத்தை விவசாயிகள் அடைந்து பயனடையலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் நல்ல பராமரிப்புக்கு தக்கவாறு 10 டன் தர்ப்பூசணி வரை விளைச்சலாக வாய்ப்புண்டு. தற்சமயம் ஒரு டன் தர்ப்பூசணி ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை போகிற நிலையில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் 10 டன் தர்ப்பூசணியை விற்பதன் மூலம் ரூ.70 ஆயிரம் வரை விற்கலாம்.
செலவுகள் போக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் லாபத்தை 2 மாதங்களில் விவசாயிகள் பெற்று லாபம் பெற வாய்ப்பு உள்ளதால் தர்ப்பூசணி ஒரு லாபகரமான விவசாயப் பயிர் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை 50 சதவீதம் மானியத்துடன் தோட்டக்கலைத் துறை தருகிறது.
அதே போல தோட்டக்கலைத் துறையோடு சேர்ந்து தேசிய வேளாண் நிறுவனமும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு கருவிகள், பாஸ்வோபாக்டீரியா, சூடாமோனாஸ் போன்ற உயிரி உரங்களை பெற்று தருகின்றனர்.
கூலியாள்கள் கிடைக்க சிரமமாய் இருக்கும் இது போன்ற நாள்களில் குறைந்த ஆட்களைக் கொண்டு தோட்டப் பயிரான தர்ப்பூசணி பயிரிடுவது எளிதாக உள்ளதாலும் அதில் நிறைய லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment