Translate

Wednesday, March 20, 2013

கேள்வி பதில்7

இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.

கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் - கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.'


1. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:
உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் - ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு - கிழக்;குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்.

2. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது.
இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா - உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் - மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது - உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் - கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான்.

3. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே!
இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.

4. உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்று:
ஹஜ்ர் அல் - அஹ்வத் என்னும் கருப்புக் கல்லைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்றில் கீழக்கண்டவாறு அறிவிக்கிறார்கள்:
'நல்லதோ அல்லது கெட்டதோ செய்ய முடியாத கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு - முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் உன்னைத் தொட்டு முத்தமிட்டிருக்க மாட்டேன்'.
மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் செய்தி புத்தகத்தில் 56வது அத்தியாயத்தில் 675வது செய்திகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

5. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்:
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் - நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் - எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?.


No comments:

Post a Comment